பெர்சவரன்ஸ் ரோவர் தரையிறங்கும் காட்சி… முதல் வீடியோவை வெளியிட்டது நாசா..!


பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும்போது, அதில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதறக்காக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, கடந்த ஜூலை 30ம் தேதி பெர்சவரன்ஸ் விண்கலத்தை அனுப்பியது. இந்த விண்கலம் 293 மில்லியன் மைல்கள் தூரம் பயணித்து, கடந்த 18ம் தேதி செவ்வாய் கிரகத்தை அடைந்தது. 7 மாத பயணத்திற்கு பிறகு செவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் ரோவர் வெற்றிகரமாக தரையிறங்கியதை நாசா விஞ்ஞானிகள் உற்சாகமாக கொண்டாடினர்.

செவ்வாய் கிரகத்தில் தனது ஆய்வு பணியை பெர்சவரன்ஸ் ரோவர் தொடங்கி உள்ளது. பெர்சவரன்ஸ் ரோவரில் உள்ள கேமராக்கள் மூலம் செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின. ரோவருடன் மிகச்சிறிய ரக ஹெலிகாப்டரும் செவ்வாய் கிரகத்தில் களமிறக்கப்பட்டுள்ளது. இதை சிறிது தூரம் பறக்கவிடப்பட்டு சோதனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்தை தரையிறக்கும் போது எடுக்கப்பட்ட முதல் வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தை நெருங்கும்போது பரபரப்பான கடைசி நிமிடத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், பாராசூட் உதவியுடன் விண்கலத்தின் வேகம் குறைக்கப்பட்டு, ரோவரின் சக்கரங்கள் செவ்வாய் கிரகத்தை தொடும்வரை பதிவாகி உள்ளன.

ரோவர் ஜெசெரோ கிரேட்டர் பகுதியில் தரையை நெருங்கும்போது தூசி எழுந்ததால் அந்த காட்சிகள் தெளிவாக இல்லை. ரோவர் செவ்வாயில் இறங்கும்போது, அதில் இணைக்கப்பட்டிருந்த கேமராக்களில் 7 கேமராக்கள் இயக்கப்பட்டு இந்த விடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!