100 செயலிகளை அதிரடியாக நீக்கிய கூகுள் – காரணம் தெரியுமா..?


கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரில் இருந்து 100 செயலிகளை அதிரடியாக நீக்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரில் இருந்து 100 செயலிகளை அதரடியாக நீக்கி இருக்கிறது. மத்திய அரசு உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. நீக்கப்பட்ட செயலிகள் கூகுள் விதிகளுக்கு புறம்பாக தனிநபர் விவரங்களை சேகரித்து, அவற்றை தவறாக கையாண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்வாறு சேகரிக்கப்பட்ட விவரங்களை கொண்டு அச்சுறுத்தல் செய்தல், மக்களை பயமுறுத்துதல், தவறான வகையில் கடன்களை திரும்ப வசூலித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் கூகுள் நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தீங்கு விளைவிக்கும் செயலிகள் பற்றிய தகவல்களை மத்திய அமைச்சகம் சார்பில் கூகுள் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. மேலும் இவை கூகுள் விதிகளுக்கு புறம்பாக செயல்படும் வாய்ப்புகள் இருந்ததாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசு அளித்த தகவல்களின் அடிப்படையில் டிசம்பர் 2020 முதல் ஜனவரி 20, 2021 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் 100 செயலிகளை கூகுள் நீக்கி இருக்கிறது. இதுபோன்ற நூற்றுக்கணக்கான செயலிகளை ஆய்வு செய்து, தவறான செயல்களில் ஈடுபட்ட செயலிகள் உடனடியாக நீக்கப்பட்டதாக கூகுள் தெரிவித்து இருக்கிறது.

மேலும் இதே சேவைகளை தொடர்ந்து வழங்கி வரும் இதர செயலிகள் உள்ளூர் சட்ட விதிகளுக்கு உட்பட வேண்டும் என அறிவுறுத்தி இருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்து உள்ளது.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!