அமெரிக்க கலவரத்தில் உயிரிழந்த பெண்ணின் கடைசி ட்வீட்..!


எங்களை யாராலும் தடுக்க முடியாது என்று அமெரிக்க கலவரத்தில் உயிரிழந்த பெண்ணின் கடைசி ட்வீட் தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

ஜோ பைடன் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் கண்டித்து, அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தை முற்றுகையிட்டு டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டம் இன்று காலை திடீரென்று வன்முறையாக மாறியது. இதில் பெண் ஒருவர் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்த அப்பெண் குறித்த கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

உயிரிழந்த அந்தப் பெண் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த அஷ்லி பாபிட் என்பதும் அவர் 14 ஆண்டுகள் அமெரிக்க விமானப்படையில் பணிபுரிந்தவர் என்றும் அமெரிக்கச் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரான அவரது கடைசி ட்விட்டர் பதிவுதான் தற்போது வைரலாகி வருகிறது. வன்முறையில் உயிரிழப்பதற்கு முன் அஷ்லி பாபிட், “எங்களை யாராலும் நிறுத்த முடியாது. அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்யலாம். ஆனால் புயல் இங்கே உருவாகிவிட்டது, அது 24 மணி நேரத்திற்குள் தலைநகரைத் தாக்கும்” என்று பதிவிட்டிருந்தார்.

அஷ்லி பாபிட்டின் மரணத்தை வாஷிங்டன் போலீஸார் உறுதிப்படுத்தினர். இருப்பினும், அவர் எவ்வாறு உயிரிழந்திருக்கலாம் என்பது குறித்துத் தெளிவான தகவல் வெளியிடப்படவில்லை.

அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் வன்முறையாளர்கள் நுழைந்தபோது குழப்பமான சூழல் ஏற்பட்டது. வன்முறையாளர்களை தடுக்க பாதுகாப்புப் படையினர் அங்கு விரைந்தனர். அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்திருக்கலாம் என்று வாஷிங்டன் போலீசார் தெரிவித்தனர்.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!