உடற்பயிற்சியின் போது சவுரவ் கங்குலிக்கு திடீர் நெஞ்சுவலி..!


இந்தியஅணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு இன்று திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து, அவர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொல்கத்தாவில் உள்ள தனது இல்லத்தில்இன்று காலை உடற்பயிற்சியில் கங்குலி ஈடுபட்டு இருந்தபோது,திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உடனடியாக கொல்கத்தாவில் உள்ள உட்லாண்ட்ஸ் மருத்துவமனையில் கங்குலி சேர்க்கப்பட்டுள்ளார்.

மருத்துவர்கள் கங்குலியை பரிசோதனை செய்ததில் அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கங்குலிக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து கங்குலிக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில் ‘ கங்குலிக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டு உட்லாண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு எந்த ஆபத்தும் இல்லை. அவருக்கு ஆஞ்சிலோ பிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட உள்ளதுஅதன்பின் வீடு திரும்புவார்’ எனத் தெரிவிக்கின்றன.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில் ‘ கங்குலிக்கு திடீரென லேசான மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் எனும் செய்தியைக் கேட்கவே வருத்தமாக இருக்கிறது. அவர் விரைந்து நலம்பெற வேண்டும என வாழ்த்துகிறேன். அவருக்கும், அவரின் குடும்பத்தாருக்கும் எனது பிரார்த்தனைகள் தொடரும்’ எனத் தெரிவித்தார்.- source: kamadenu

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!