வாலிபரின் உயிரைப் பறித்த ஆன்லைன் சூதாட்டம் – உருக்கமான கடிதம் சிக்கியது


பெங்களூருவில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியுள்ளது.

பெங்களூரு கெங்கேரி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட உல்லாலை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 28). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் ஆன்லைனில் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளை பணம் கட்டி ஜெகதீஷ் விளையாடி வந்ததாக தெரிகிறது.

ஆனால் இந்த சூதாட்ட விளையாட்டுகள் மூலம் ஜெகதீசுக்கு பணம் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. ஆனாலும் தன்னிடம் இருந்த பணத்தை வைத்து ஜெகதீஷ் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை விளையாடி வந்து உள்ளதாக சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் தன்னிடம் இருந்த அனைத்து பணத்தையும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் ஈடுபட்டதன் மூலம் ஜெகதீஷ் இழந்து விட்டதாக தெரிகிறது. இதனால் அவர் மனம் உடைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற ஜெகதீஷ், பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா பத்ரஹள்ளிக்கு சென்றார். பின்னர் அங்கு உள்ள ஒரு மரத்தில் ஜெகதீஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த நெலமங்களா புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜெகதீசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

முன்னதாக ஜெகதீசின் சட்டை பையில் இருந்த ஒரு கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் ஈடுபட்டு பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று உருக்கமாக எழுதப்பட்டு இருந்தது. இதனால் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் ஜெகதீஷ் தற்கொலை செய்தது உறுதியானது. இந்த சம்பவம் குறித்து நெலமங்களா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.- source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!