சித்ரா என்னிடம் பணம் கேட்டார்..? ஹேம்நாத்தின் தந்தை பகீர் தகவல்..!


டி.வி. நடிகை சித்ரா விவகாரத்தில் கணவர் ஹேம்நாத்திடம் 8 மணி நேரம் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ விசாரணை மேற்கொண்டார்.

டி.வி. நடிகை சித்ரா செம்பரம்பாக்கம் அருகே உள்ள விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை நசரத்பேட்டை போலீசார் கைது செய்து பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.

ஹேம்நாத்தை விசாரணைக்காக ஆஜர்படுத்த ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ பொன்னேரி சிறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினார். நேற்று காலை 8.20 மணிக்கு ஹேம்நாத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். சித்ரா தற்கொலை குறித்து ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ சித்ராவின் தாய், தந்தை மற்றும் ஹேம்நாத்தின் தாய், தந்தை ஆகியோரிடம் விசாரணை நடத்திய நிலையில் சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் நேற்று விசாரணை நடத்தினார். 8 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிந்து ஹேம்நாத் தகுந்த பாதுகாப்புடன் போலீஸ் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டார்.


நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் ஆர்.டி.ஓ விசாரணை முடிந்த பின் ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

விசாரணை ஒரு பக்கமாகவே நடைபெறுவதாக தெரிகிறது. சித்ராவின் நெருங்கிய வட்டாரங்களில் விசாரணை நடைபெற்றதாக தெரியவில்லை. என் மகனிடம் 6 நாட்கள் விசாரணை நடைபெற்ற நிலையில் 7-வது நாள் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு முன்பு அவசர அவசரமாக கைது செய்யப்பட்டார்.

சித்ராவின் செல்போன் தகவல்களை முறையாக ஆராய்ந்து, அதில் கிடைக்கும் உண்மை தகவல்களை ஆராய வேண்டும். சித்ராவுக்கு ஏதோ ஒரு வகையில் பெரிய மன அழுத்தம் இருந்துள்ளது. ஏனென்றால் சித்ரா தற்கொலை செய்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, தன் வீட்டின் மீது தான் வாங்கிய கடன் தொகையை செலுத்த பணம் தரும்படி என்னிடம் கூறியபோது நான் சம்மதம் தெரிவித்தேன். ஆகையால் ஏதேனும் பொருளாதார பிரச்சினையில் அவர் சிக்கினாரா? இல்லை அது சம்பந்தமாக யாரேனும் மிரட்டினார்களா என தெரியவில்லை.


இவ்வாறு அவர் கூறினார்.

ஹேம்நாத்தின் வக்கீல் விஜயகுமார் கூறுகையில்:-

தனிப்பட்ட இருவரின் சண்டையால் இந்த தற்கொலை நடைபெறவில்லை. இது ஒரு பிரபலத்தின் தற்கொலை என்பதை நினைவில் வைத்து விசாரணை நடத்த வேண்டும். சித்ரா கார் வாங்கியுள்ளார். புதிதாக வீடு கட்டியுள்ளார். இதனால் பொருளாதார ரீதியாக பிரச்சினை வந்து இருக்கலாம். அது குறித்த விசாரணையையும் நடத்த வேண்டும். இது குறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!