80 அடி உயர நீர்வீழ்ச்சியில் சிக்கி தவித்த தமிழக மருத்துவ மாணவர்..!


சிவமொக்கா அருகே 80 அடி உயர நீர்வீழ்ச்சியில் சிக்கி தவித்த தமிழக மருத்துவ மாணவர் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டார்.

கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் ஒசநகர் தாலுகாவில் உள்ளது கொடசாத்திரி மலை. இங்கு ஹிட்லமனே நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சியில் 80 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது. இது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இதனால் இந்த நீர்வீழ்ச்சியை கண்டு ரசிக்க தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கிறார்கள். மேலும் சிலர் சட்டவிரோதமாக நீர்வீழ்ச்சியில் ஏறி மலையேற்றத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து வரும் ஹாசனை சேர்ந்த அமோகா, தமிழகத்தை சேர்ந்த சஞ்சீவ் (வயது 29), ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த மது ஆகியோர் கொடசாத்திரி மலைக்கு கடந்த சனிக்கிழமை வந்தனர். அவர்கள் ஜீப்பில் ஹிட்லமனே நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளனர். நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்த அவர்கள், 80 அடி உயர மலையில் மலையேற்றத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.

இதில் அவர்கள் வெறும் கை, கால்களால் மலையேற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் பாதி தூரம் சென்றதும் அமோகா, மதுவும் கீழே இறங்கியுள்ளனர். ஆனால் சஞ்சீவ் மலையின் உச்சிக்கு சென்றார். அதன் பின்னர் அவரால் கீழே இறங்க முடியவில்லை. இதனால் அவர் 80 அடி உயர நீர்வீழ்ச்சியில் ஒரு பாறையில் ஒற்றை காலில் நின்றபடி சிக்கி தவித்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அமோகா, மது ஆகியோர் ஒசநகர் வனத்துறையினருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் கயிறுகளை கட்டி சஞ்சீவை மீட்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர்.

இதன் பயனாக 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சஞ்சீவை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர். மலையில் சிக்கி தவித்த சஞ்சீவ் சுமார் 2 மணி நேரமாக சிறிய பாறையில் ஒற்றை காலில் நின்று உயிர் தப்பியதும் தெரியவந்தது. இதனால் அவர் சோர்வாக இருந்தார். அவருக்கு தண்ணீர், முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதையடுத்து 3 பேரையும் வனத்துறையினர் எச்சரித்து அங்கிருந்து பெங்களூருவுக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.
– source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!