176 பயணிகளுடன் வெடித்து சிதறிய உக்ரைன் விமானம் பற்றி ஈரான் அதிர்ச்சி தகவல்..!


உக்ரைன் விமானத்தின் மீது முதல் ஏவுகணை தாக்குதல் நடந்த பின்னரும் 19 வினாடிகள் விமானிகள் பேசிக்கொண்டிருந்ததாக ஈரான் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

ஈரான் நாட்டின் தெஹ்ரான் நகரில் இருந்து ஜனவரி 8 ஆம் தேதி 176 பயணிகளுடன் உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான உக்ரைன் இண்டர்நேஷ்னல் ஏர்லைன்ஸ் 752 விமானம் உக்ரைனின் கிவ் நகர் நோக்கி புறப்பட்டது.

ஓடுதளத்தை விட்டு புறப்பட்டு நடுவானில் பறந்துகொண்டிருந்த சில நிமிடங்களில் விமானத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த ஏவுகணை தாக்குதலில் விமானத்தில் பயணம் செய்த 176 பேரும் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இஸ்லாமிக் ரிவோல்டரி காட்ஸ்ஸ் க்ராம் என்ற ஈரானின் புரட்சிப்படை தளபதியான காசிம் சுலைமானியை அமெரிக்கா ஏவுகணை தாக்குதலில் கொன்றது.

மேலும், விமானம் வீழ்த்தப்பட்ட நேரத்திற்கு சிலமணி நேரத்திற்கு முன்புதான் ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத்தளங்களை குறிவைத்து ஈரான்
ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் தாக்குவதாக நினைத்து உக்ரைன் விமானம் மீது ஈரான் தவறுதலாக ஏவுகணை தாக்குதல் நடத்திவிட்டது.

தொடக்கத்தில் உக்ரைன் விமான தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்தை சந்த்ததாக கூறிவந்த ஈரான் இறுதியில் விமானம் தங்கள் நாட்டு ஏவுகணையால் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டுவிட்டது என ஒப்புக்கொண்டது.

இதற்கிடையில், ஏவுகணை தாக்குதலில் சுட்டுவீழ்த்தப்பட்ட விமானத்தில் இருந்த கருப்புப்பெட்டியை மீட்ட ஈரான் அரசு அதில் பதிவான தகவல்களை ஆராய்ந்து வந்தது. தற்போது அந்த கருப்புப்பெட்டி மேலும் சில ஆய்வுகளுக்காக பிரான்ஸ் அரசிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விமானத்தின் கருப்பு பெட்டியில் பதிவான தகவல்கள் குறித்த சில அதிர்ச்சி விவரங்களை ஈரான் அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

ஈரான் விமானப்போக்குவரத்து அமைப்பின் தலைவர் சங்ஹநிக் இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ’முதல் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டு 19 வினாடிகளுக்கு விமான இயக்கத்தில் அசாதாரன சூழல் நிலவியதை விமானிகள் உணர்ந்தனர். விமானத்தில் எலக்ட்ரானிக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் துணை மின் இயக்கம் செயல்படுத்தப்படுவதாகவும் விமானி தெரிவித்தார்.

விமானத்தின் இரண்டு என்ஜின்களும் செயல்பாட்டில் இருப்பதாக விமானிகள் தெரிவித்தனர்.

முதல் ஏவுகணை தாக்கப்பட்ட பின்னரும் 19 வினாடிகளுக்கு விமானிகள் பேசும் சத்தம் பதிவாகி இருப்பது அதுவரை விமானத்தில் பயணிகள் உயிரோடுதான் இருந்துள்ளனர் என காட்டுகிறது. அந்த தருணத்தில் பயணிகள் கேபின் பகுதியில் இருந்து எந்த சத்தமும் வரவில்லை.

19 வினாடிகளுக்கு பின்னர் விமானத்தில் கருப்பு பெட்டியின் பதிவுகள் நின்றுவிட்டது. 25 வினாடிகள் கழித்து 2-வது ஏவுகணை விமானத்தை தாக்கியது. விமானிகள் கடைசி தருணம் வரை விமானத்தை இயக்கி வந்தனர்’ என அவர் தெரிவித்தார்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!