எங்களுக்கு இறுதிச்சடங்கை மகன்கள் யாரும் செய்யக்கூடாது- உயிரை மாய்த்த பெற்றோர்..!


மகன்கள் யாரும் இறுதிச்சடங்கை செய்யக்கூடாது என்று உருக்கமான கடிதம் எழுதிவைத்துவிட்டு 3 மகன்களை பெற்ற தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரம்பூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரம்பூர் செம்பியம் மேல்பட்டி பொன்னையன் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் குணசேகரன் (வயது 65). இவருடைய மனைவி செல்வி (54). இவர்களுக்கு 3 மகன்கள். இதில் 2 மகன்களுக்கு திருமணமாகி, குடும்பத்துடன் தனியாக வசித்து வருகின்றனர்.

கடைசி மகன் ஸ்ரீதர் (29) தனது தாய்-தந்தையுடன் வசித்து வருகிறார். குணசேகரன் தச்சுவேலை செய்து வந்தார். சரிவர வேலை கிடைக்காததால் தனியார் நிறுவனத்தில் காவலாளி வேலை செய்து வந்தார். ஊரடங்கு நேரத்தில் மகன் ஸ்ரீதரும், குடிப்பழக்கத்துக்கு ஆளாகி சரியாக வேலைக்கு எதுவும் செல்லவில்லை.

ஊரடங்கு நேரத்தில் குணசேகரனுக்கும் வேலை இல்லாததால் வருமானம் இன்றி குடும்பம் நடத்த முடியாமல் பரிதவித்து வந்தார். வருமானம் இல்லாததால் வீட்டு வாடகையையும் கொடுக்க முடியாமல் தவித்தார். தன் மகன்களிடம் வீட்டு வாடகை கொடுக்கவும், குடும்ப செலவுக்கும் பண உதவி கேட்டதாகவும், ஆனால் அதற்கு அவர்கள் மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

மகன்கள் பண உதவி செய்யாததால் மனமுடைந்த குணசேகரன், செல்வி இருவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்துவந்த செம்பியம் போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் வீட்டில் சோதனை செய்தபோது தற்கொலைக்கு முன்னதாக குணசேகரன் எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில் அவர், “எங்களுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எங்களுடைய இறுதிச்சடங்கை மகன்கள் யாரும் செய்யக்கூடாது. போலீசாரே இறுதிச்சடங்கு செய்யவேண்டும்” என அந்த கடிதத்தில் உருக்கமாக எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து பெற்றோர் உடலை தருமாறு மகன்கள் கதறியதால் போலீசார் அவர்களிடம் ஒப்படைத்தனர். பின்னர் வயதான தம்பதியின் உடலுக்கு போலீசார் மரியாதை செய்தனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!