3 வாலிபர்களின் மரண தண்டனை நிறுத்தம்… ஏன் தெரியுமா..?


சமூக ஊடகத்தில் எதிர்ப்பு வலுத்ததால் ஈரானில் 3 வாலிபர்களின் மரண தண்டனை நிறுத்தப்பட்டு மறு விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஈரான் நாட்டில் கடந்த நவம்பர் மாதம் பெட்ரோல் விலையை உயர்த்தியபோது, வறுமை, பணவீக்கம், பொருளாதார முறைகேடு ஆகியவற்றை எதிர்த்து கோடிக்கணக்கான மக்கள், தெருக்களில் இறங்கி போராட்டங்கள் நடத்தினர். இந்த போராட்டங்கள், பாதுகாப்பு படையினரால் ஒடுக்கப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

இந்த போராட்டங்களின்போது, அமீர்ஹோசின் மொராடி, முகமது ராஜாபி, சயீத் தம்ஜிடி என்னும் 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் 3 பேரும் நாட்டுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதை கடந்த செவ்வாய்க்கிழமையன்று அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. ஆனால், ‘மரண தண்டனையை செயல்படுத்தாதே’ என்ற தலைப்பில் சமூக ஊடகத்தில் ‘ஹேஷ்டேக்’ உருவாக்கி, அதை 75 லட்சம் முறை பயன்படுத்தி மக்கள் தங்கள் எதிர்ப்பை ஒருமித்த குரலில் பதிவு செய்தனர். இந்த எதிர்ப்பு பிரசாரத்தை பல பிரபலங்களும் ஆதரித்தனர்.

இதைத் தொடர்ந்து 3 பேரின் மரண தண்டனையும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மறுவிசாரணைக்கும்உத்தரவிடப்பட்டுள்ளது.

ஈரானில் கொரோனா வைரஸ் தொற்று 2 லட்சத்து 64 ஆயிரம் பேரை பாதித்தும், 13 ஆயிரம் பேரை கொன்று குவித்தும் உள்ளது. ஆனாலும்கூட, ஈரானிய அதிகாரிகள் மரண தண்டனை தரும் வழக்குகளை நிறுத்தவில்லை. மரண தண்டனைகளை நிறைவேற்றுவதையும் கைவிடவில்லை.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று கூட மேற்கு அஜர்பைஜான் மாகாணத்தில் உள்ள உரூமி சிறையில் 2 குர்து இன ஆண்கள் தூக்கிலிடப்பட்டனர். ராணுவ அணிவகுப்பு ஒன்றில் வெடிகுண்டு வைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவர்களுக்கு 2015-ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 5 ஆண்டுகள் ஆன நிலையில் இப்போது அவர்களது தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!