பெங்களூருவில் இளம்பெண்ணுடன் டேட்டிங் செல்ல ஆசைப்பட்டு வாலிபர் ஒருவர் ரூ.1¼ லட்சத்தை இழந்த சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு ஹெப்பால் அருகே 30 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவரது செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண்களுடன் செல்போனில் பேசுவதற்கு, குறுந்தகவல் அனுப்ப நினைத்தால் ரூ.1,500 கட்டணம் செலுத்த வேண்டும் என்று குறுந்தகவல் வந்தது. இதையடுத்து, இளம்பெண்களுடன் குறுந்தகவல் மூலம் பேச ஆசைப்பட்டு முதலில் ரூ.1,500 கட்டணம் செலுத்தினார்.
அதன்படி, செல்போனில் சில பெண்களுடன் அவர் பேசி வந்தார். அதன்பிறகு, இளம்பெண்ணுடன் ஓட்டலில் தங்குவதற்கும், டேட்டிங் செல்லவும் ரூ.28 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று மற்றொரு குறுந்தகவல் வாலிபருக்கு வந்தது. உடனே இளம்பெண்ணுடன் டேட்டிங் செல்ல ஆசைப்பட்டு ரூ.28 ஆயிரத்தை ஆன்லைன் மூலம் மர்மநபர்கள் கூறிய வங்கி கணக்குக்கு அந்த வாலிபர் அனுப்பினார்.
ஆனால் அந்த மர்மநபர்கள் கூறியபடி இளம்பெண் யாரும் ஓட்டலுக்கு வரவில்லை. அதன்பிறகு, அந்த இளம்பெண் மேலும் பணம் கேட்டதாக வாலிபரிடம் மர்மநபர்கள் கூறினார்கள். இதனை நம்பி அந்த வாலிபர் ரூ.1 லட்சத்தை அனுப்பி வைத்துள்ளார்.
அப்படி இருந்தும் டேட்டிங்கில் ஈடுபட இளம்பெண்ணை மர்மநபர்கள் அனுப்பவில்லை. அப்போது தான் மர்மநபர்கள் தன்னிடம் பணம் வாங்கி மர்மநபர்கள் மோசடி செய்ததை வாலிபர் உணர்ந்தார். ஒட்டு மொத்தமாக அந்த வாலிபரிடம் ரூ.1 லட்சத்து 29 ஆயிரத்து 500 வாங்கி மோசடி செய்திருந்தனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் வாலிபர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகிறார்கள்.-Source: maalaimalar
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!