ஐபோன் திருடர்களை எச்சரிக்கும் ஆப்பிள்.. நீங்களாக கொடுத்துவிடுங்கள் நாங்கள் கண்டுபிடித்தால்…!


ஆப்பிள் விற்பனையகங்களில் இருந்து ஐபோன்களை திருடியவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை கலந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் கடும் போராட்டங்களுக்கு இடையே ஆப்பிள் விற்பனை மையங்களில் இருந்து திருடப்பட்ட ஐபோன் மாடல்களை டிராக் செய்ய துவங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க விற்பனையகங்களில் திருடப்பட்ட ஐபோன் மாடல்களின் புகைப்படங்களை பலர் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

தயவு செய்து ஆப்பிள் வால்நட் ஸ்டிரீட் வந்துவிடுங்கள். இந்த சாதனங்கள் டிராக் செய்யப்பட்டு அவை செயலிழக்க செய்யப்படுகின்றன. இத்துடன் உள்ளூர் அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்படும்.

வழக்கமாக ஆப்பிள் ஸ்டோர்களில் இருந்து திருடப்படும் ஐபோன்களை ஆப்பிள் ஸ்டோர் வெளியில் பயன்படுத்த முடியாது. ஆப்பிள் ஸ்டோர்களில் காட்சிக்கு வைக்கப்படும் ஐபோன்களில் பிரத்யேக டிராக்கிங் மென்பொருள் இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும். இந்த மென்பொருள் கொண்டு திருடப்பட்ட ஐபோன்களை ஆப்பிள் டிராக் செய்துவிடும்.

ஆப்பிள் விற்பனை மையங்கள் மார்ச் மாத மத்தியில் இருந்து கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மூடப்பட்டுள்ளது. எனினும், கடந்த வாரம் அமெரிக்கா முழுக்க 100 விற்பனை மையங்களை ஆப்பிள் திறப்பதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் நியூ யார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் வாஷிங்டன் போன்ற நகரங்களில் உள்ள ஆப்பிள் ஸ்டோர்களில் இருந்து ஐபோன்கள் திருடப்பட்டன.

போலீஸ் அதிகாரியால் கொலை செய்யப்பட்ட ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணத்தை தொடர்ந்து ஐபோன்கள் திருடப்பட்டன. ஃபிளாய்ட் மரணத்திற்கு எதிராக அமெரிக்கா முழுக்க கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆப்பிள் ஸ்டோர்கள் மட்டுமின்றி போர்ட்லாந்து மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் முழுக்க பல்வேறு விலை உயர்ந்த கடைகளில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!