மக்கள் வீட்டுக்குள்ளே- சிறுத்தைகள் ஊருக்குள்ளே..!


வால்பாறை பகுதியில் ஊரடங்கால் மக்கள் நடமாட்டம் குறைந்ததால் சிறுத்தைகள் சுதந்திரமாக சுற்றித்திரிவதால் பொதுமக்கள் வெளியே வர பயப்படுகிறார்கள்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. வனப்பகுதியையொட்டி தேயிலைச்செட்டிகள், காப்பித்தோட்டங்கள் மற்றும் தொழிலாளர்கள் குடியிருப்புகள் உள்ளது. இங்கு சிறுத்தை, யானை, காட்டெருமை, கரடி போன்ற வனவிலங்குகள் இரையைத் தேடி அவ்வப்போது சாலையை கடப்பது இரவில் வழக்கமானது.

தற்போது தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் குடியிருப்பு பகுதிகளுக்குள் வலம் வரும் சிறுத்தைகள், கால்நடைகள் மற்றும் பொதுமக்களை தாக்கி வருகின்றது. சிறுத்தை தாக்கி கால்நடைகள் இறந்துள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

இதற்கிடையே ஊரடங்கால் பகல் நேரங்களிலேயே மக்கள் நடமாட்டம் குறைந்தது. இரவில் முற்றிலும் மக்கள் நடமாட்டம் இல்லாத நிலை ஏற்பட்டதால் அங்குள்ள சிறுத்தைகளுக்கு வசதியாக போய்விட்டது. கடந்த சில நாட்களாகவே வால்பாறை நகராட்சி பகுதி மற்றும் எஸ்டேட் பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில் வால்பாறை புதிய பேருந்து நிலையம், சுப்பிரமணியசுவாமி கோவில் அருகே மற்றும் சாலைகளிலும் சிறுத்தை நடமாடிய காட்சிகள் காவல்துறை நகரப்பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா மூலம் பதிவாகி உள்ளது. வீட்டருகே சிறுத்தைப்புலி நடமாடியதை சிலர் தங்களது செல்போனில் படம் பிடித்துள்ளனர்.

இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனே இருந்து வருகின்றனர். இந்த சிறுத்தைகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!