5 ஆண்டுகளுக்கு முன்பே அப்படி செய்யாதது வருத்தம்… பில்கேட்ஸ்


கொரோனா குறித்து 5 ஆண்டுகளுக்கு முன்பே கணித்து கூறிய கோடீஸ்வரர் பில் கேட்ஸ், தற்போது அதன் தாக்கத்தை மிகவும் பயங்கரமானது என கூறியிருக்கிறார்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 லட்சத்தை நெருங்கி உள்ளது. இதுவரை 2.87 லட்சம் மக்கள் இந்த வைரசுக்கு பலியாகி உள்ளனர். இன்னும் இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் அதன் வீரியம் குறைந்தபாடில்லை.

இப்படி மனித குலத்தையே நாசம் செய்து வரும் இந்த தொற்று நோய் குறித்து, உலக கோடீஸ்வரரும், மைக்ரோசாப்ட் நிறுவன தலைவருமான பில்கேட்ஸ் 5 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்திருந்தார்.

அடுத்த பத்து ஆண்டுகளில் உலகளாவிய பேரழிவு போரினால் இருக்காது என்றும், பல கோடி மக்களை நுண்ணுயிரி கொன்று குவிக்கும் என்றும் அவர் கூறியிருந்தார். அடுத்த தொற்றுநோயை எதிர்கொள்வதற்கு தயாராக தவறினால், எபோலாவைவிட அழிவு அதிகமாக இருக்கும் என்று கூறியிருந்தார். பில் கேட்ஸ் கணித்தது இப்போது யதார்த்தமாகி உள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்துகளை உருவாக்குவதற்கும், நோய் கண்காணிப்பு முறைகளை உருவாக்குவதற்கும் விரைவான வழிகளைக் கண்டறிய பல கோடி ரூபாய் செலவு செய்துள்ளார் பில்கேட்ஸ். இந்த புதிய தொற்று நோய்களுக்கு எதிராக உலக தலைவர்கள் தேசிய பாதுகாப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் கூறும் தகவல்களை உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றன.

இந்நிலையில் பில்கேட்ஸ் சமீபத்தில் அளித்த பேட்டியின்போது, ‘புதிய தொற்றுநோயின் ஆபத்து குறித்து எரிச்சரிப்பதில், நான் இன்னும் அதிகமாக செய்திருக்க வேண்டும். அப்போது மிகவும் அழுத்தி சொல்லாதது வருத்தம் அளிக்கிறது. இது மிகவும் பயங்கரமானது. ஆனால், இப்போது நாம் நடவடிக்கை எடுத்து சேதத்தை குறைக்க முடியும்’ என நம்பிக்கை தெரிவித்தார்.

கொரோனா தடுப்பு மருந்து மற்றும் சிகிச்சை தொடர்பான ஆராய்ச்சியாளர்களுக்கு, பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சம்பளம் வழங்குகிறது. அவர்கள் கண்டுபிடிக்கும் மருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதும், கோடிக்கணக்கான தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்ய மருந்து நிர்வாகிகள் மற்றும் அரசாங்கங்களுடன் இந்த அறக்கட்டளை இணைந்து செயல்படுகிறது. ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்தவுடன் அவற்றை விநியோகிக்க தயார் நிலையில் உள்ளது. தொழிற்சாலையில் இடம் ஒதுக்குவதற்கும் அறக்கட்டளை உதவி செய்துள்ளது. இதன்மூலம் பயனுள்ள புதிய மருந்துகளின் உற்பத்தியை விரைவாக தொடங்க முடியும்.

மருந்து கண்டுபிடிப்பு ஆய்வு தொடர்பாக மருந்து நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்துவதுடன், தடுப்பூசி உற்பத்தியின் விவரங்களை திரட்டுகிறார். தொற்று நோயின் தீவிரம், அது தொடர்பான அறிவியல் வளர்ச்சி குறித்து அமெரிக்கா மற்றும் உலகத் தலைவர்களுடன் விவாதிக்கிறார்.

தொலைக்காட்சி நேர்காணல்களிலும் அவரது வலைப்பதிவிலும், வைரஸ் பரவலை குறைப்பதற்கான ஊரடங்கு உத்தரவு மற்றும் வர்த்தக நிறுவனங்கள், பள்ளிகளை படிப்படியாக திறப்பதற்கு பின்னால் உள்ள காரணங்களை விளக்குகிறார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!