தைப்பூசத்திற்காக திருச்செந்தூரில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்


தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் பாத யாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக கோவிலுக்கு வந்தனர். ஏராளமான பக்தர்கள் பல்வேறு அடி நீள அலகு குத்தியும், காவடி எடுத்தும் பாத யாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். சில பக்தர்கள் 15 அடி நீளம் வரையிலான அலகு குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பல்வேறு ஊர்களில் இருந்தும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் முருக பெருமானின் உருவ படத்தை வைத்து, அவரது திருப்புகழை பாடியவாறு பாத யாத்திரையாக வந்தனர். பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். சில பக்தர்கள் கடற்கரையில் மண்ணால் கோவில் போன்று அமைத்து, அதில் முருகபெருமானின் உருவ படத்தை வைத்து வழிபட்டனர். இதனால் திருச்செந்தூர் நகரம் விழாக்கோலம் பூண்டது.

தைப்பூச திருவிழாவான இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதையடுத்து 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, காலை 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதை தொடர்ந்து காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் சுவாமி அலைவாயுகந்த பெருமான் தங்க சப்பரத்தில் வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், செயல் அலுவலர் அம்ரித் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து உள்ளனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!