குடிபோதையில் அவதூறாக பேசியதால் தீர்த்துக்கட்டினோம்’ – கைதான 8 பேர் பகீர் வாக்குமூலம்


நெல்லையில் வாலிபர் கொலையில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள், “குடிபோதையில் அவதூறாக பேசியதால் வாலிபரை தீர்த்துக்கட்டினோம்“ என்று பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

நெல்லை தச்சநல்லூரை அடுத்த கரையிருப்பு கிராமம் சுந்தராபுரத்தை சேர்ந்தவர் சுடலைமுத்து மகன் மாசானமூர்த்தி (வயது 24). இவர் தூத்துக்குடி துறைமுகத்தில் டிரைவர் மற்றும் கிரேன் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி.

கடந்த 15-ந் தேதி பொங்கல் பண்டிகை அன்று மாசானமூர்த்தி வீட்டில் சாப்பிட்டு விட்டு வயலுக்கு செல்வதாக தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாசானமூர்த்தியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் மாசானமூர்த்தி கொலை செய்யப்பட்டு வேப்பங்குளம் காட்டுப்பகுதியில் புதைக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டது. மேலும், கிணற்றில் கிடந்த மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டது.

இதுதொடர்பாக பால்கட்டளை பகுதியை சேர்ந்த சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் அவர்கள்தான், மாசானமூர்த்தியை கொன்று புதைத்தது தெரியவந்தது. இதுதொடர்பாக ஆறுமுகம் (25), விஜய் (23), பேச்சிராஜா (23), நவநீதகிருஷ்ணன் (23), வசந்தகுமார் (23), மாரியப்பன் (25), மகேந்திரன் (24), தினேஷ்குமார் (22) ஆகிய 8 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொலைக்கான காரணம் குறித்து போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

பொங்கல் அன்று மாசானமூர்த்தியும், அவருடைய நண்பர்களும் பால்கட்டளை அருகே உள்ள ஒரு மறைவிடத்துக்கு சென்று மது குடித்தனர். அங்கு மாசானமூர்த்திக்கு போதை அதிகமானது. இதனால் அவர் அந்த இடத்திலேயே படுத்து விட்டார். அவருடைய நண்பர்கள் அவரை எழுப்பி அழைத்துச்செல்ல முயற்சி செய்தனர். ஆனால், முடியவில்லை. இதனால் அவரை அங்கேயே போட்டு விட்டு சென்று விட்டனர்.

சிறிது நேரம் கழித்து நாங்கள் அந்த பகுதிக்கு மது குடிக்க சென்றோம். அப்போது அங்கு போதையில் படுத்து கிடந்த மாசானமூர்த்தியை எழுப்பினோம். போதையில் தள்ளாடியபடி எழுந்த அவர் எங்களை பார்த்து அவதூறாக பேசினார். வேறு பகுதியை சேர்ந்தவர் எங்கள் பகுதிக்கு வந்து மதுகுடித்தது மட்டுமல்லாமல் எங்களையே அவதூறாக பேசுகிறாயா? என்று தட்டிக் கேட்டு தாக்கினோம்.

பின்னர் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து அருகில் உள்ள கிணற்றுப்பகுதிக்கு தூக்கிச்சென்று அரிவாளால் வெட்டினோம். இதில் கழுத்தில் வெட்டுக்காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மாசானமூர்த்தி இறந்துவிட்டார். அவருடன் யாரும் இல்லாததால் கொலையை மறைத்து விட்டு எதுவும் நடக்காதது போல் தப்பித்து விடலாம் என எண்ணினோம்.

அதன்படி, அவரது உடலை அங்கு குழிதோண்டி புதைத்தோம். மேலும் அருகில் உள்ள கிணற்றில் மாசானமூர்த்தியின் மோட்டார் சைக்கிளை தூக்கி வீசினோம். ஆனால், போலீசார் கிணற்றில் மிதந்த பெட்ரோலை கண்டுபிடித்து அதன்மூலம் எங்களையும் பிடித்து விட்டனர்.

இவ்வாறு அவர்கள் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த கொலை தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!