கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேன் – இங்கிலாந்து முன்னாள் வீரர் வாகன்..!


விராட் கோலி தான் 3 வடிவிலான கிரிக்கெட்டிலும் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என இங்கிலாந்து முன்னாள் வீரர் வாகன் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது. அவர் 2 அரை சதம் அடித்து இருந்தார்.

பெங்களூரில் நடந்த 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் சுமித்தும் சதம் அடித்தார். விராட் கோலிக்கும், சுமித்துக்கும் இடையே உலகின் சிறந்த பேட்ஸ்மேன் யார்? என்ற விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் விராட் கோலி தான் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

ஸ்டீவ் சுமித்தான் கிரிக்கெட்டின் 3 வடிவிலான போட்டிகளுக்கும் தற்போது சிறந்த பேட்ஸ்மேன். அவர் மீண்டும் ஒருமுறை அதை நிரூபித்துள்ளார். என்று டேனியல் அலெக்சாண்டர் என்பவர் தெரிவித்துள்ளார்.

இது தவறானது. விராட் கோலி தான் 3 வடிவிலான கிரிக்கெட்டிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) உலகின் சிறந்த பேட்ஸ்மேன். ஸ்டீவ் சுமித் அல்ல.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

‘விராட் கோலி தான் 3 வடிவிலான போட்டிகளுக்கும் சிறந்த பேட்ஸ்மேன்’ என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் முடிந்த பிறகு தெரிவித்து இருந்தார்.

விராட்கோலி தற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியின் ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளார். 20 ஓவரில் 9-வது இடத்தில் இருக்கிறார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!