பாபா முத்திரையிலிருந்து நீக்கப்பட்ட தாமரை மலர் – ரஜினி அதிரடி..!


நடிகர் ரஜினி நேற்று முன்தினம் தனிக்கட்சி தொடங்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்ட போது, அவர் நின்ற மேடையின் பின்புறம் ‘பாபா’ முத்திரை சின்னம் கொண்ட ‘லோகோ’ இடம் பெற்றிருந்தது.

தாமரை மலர் மீது பாபா முத்திரை இடம் பெற்றிருப்பது போன்று அந்த சின்னம் அமைந்திருந்தது.

இதையடுத்து ரஜினி தொடங்கும் அரசியல் கட்சியின் சின்னமாக “பாபா முத்திரை” தேர்வாகக் கூடும் என்று தகவல்கள் வெளியானது. இமயமலையில் இன்றும் வாழ்பவராக கருதப்படும் பாபாஜியின் அந்த முத்திரை தமிழர்கள் மத்தியில் ஏற்கனவே பிரபலமாகி விட்டது.

வலது கையின் ஆள் காட்டி விரலையும், சுண்டு விரலையும் உயர்த்தி மற்ற 3 விரல்களையும் மடக்கி இருப்பதே பாபா முத்திரையாகும். இந்த முத்திரைக்கு “அபான முத்திரை” என்று பெயர்.

இந்த முத்திரையை முறைப்படி செய்து வந்தால் உடல், உயிர், அறிவு மூன்றிலும் சிலிர்ப்பு ஏற்பட்டு பலன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆன்மிக அரசியலை மேற்கொள்ளப் போவதாக கூறியுள்ள ரஜினிக்கு இந்த பாபா முத்திரை சின்னம் மிகவும் கை கொடுக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் சமூக வலைத்தளங்களில் பலரும் பாபா முத்திரை சின்னத்தை விமர்சித்தனர்.

தாமரை மீது பாபா முத்திரை இருப்பது, ரஜினியின் அரசியல் பின்னணியில் பா.ஜ.க. இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதாக விமர்சனம் எழுந்தது. சமூக வலைத்தளங்களில் இது வைரலாக பரவியது.

இதையடுத்து பொது மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் பாபா முத்திரை விவகாரத்தில் அதிரடி மாற்றங்களை ரஜினி செய்துள்ளார். அதன்படி பாபா முத்திரையின் கீழ் இருந்த தாமரை மலர் நீக்கப்பட்டுள்ளது.

பாபா முத்திரை வட்டத்தில் முன்பு கருப்பு கலர் இருந்தது. அதையும் அகற்றி விட்டு நீல நிற வண்ணத்தை சேர்த்துள்ளனர்.

நேற்று இந்த அதிரடி மாற்றம் செய்யப்பட்டது. தாமரை மலர் நீக்கப்பட்ட பாபா முத்திரை கீழ் உண்மை, உழைப்பு, உயர்வு என்ற வாசகம் புதிதாக இடம் பிடித்துள்ளது.

எதிர்காலத்தில் பா.ஜ.க.வின் தேர்தல் சின்னமான தாமரை சின்னத்தால், தனது பாபா முத்திரை சின்னத்துக்கு பாதிப்பு வந்து விடக்கூடாது என்பதாலும், தேர்தல் கமி‌ஷனில் இடையூறு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே ரஜினி தாமரையை விலக்க உத்தரவிட்டதாக தெரிய வந்துள்ளது.

பாபா முத்திரை வட்டத்தை சுற்றி ஒரு பாம்பு படம் வரையப்பட்டுள்ளது. பாபா முத்திரை வட்டத்து உச்சியில் பாம்பு படம் எடுத்திருப்பது போன்று உள்ளது. இந்த பாம்பு, பாபா முத்திரையில் எப்படி வந்தது என்ற தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.


கொல்கத்தாவில் உள்ள பேளூர் மடத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் ராமகிருஷ்ணா மடம் தனக்கென ஒரு சின்னத்தை வைத்துள்ளது. சூரியன் உதிக்கும் பின்னணியில் உள்ள தடாகத்தில் தாமரையும், வாத்தும் உள்ளது.

அந்த சின்னத்தை சுற்றி பாம்பு படம் இருக்கிறது. அதே போன்று தனது பாபா முத்திரை சின்னத்திலும் பாம்பு சுற்றி இருப்பது போல சின்னத்தை ரஜினி வடிவமைத்து இருப்பதாக சொல்கிறார்.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மி‌ஷன் கோவிலுக்கு சென்றார். அங்கு அவர் ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் கெளதமானந்தா மகராஜை சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்புக்கு பிறகே பாபா முத்திரை சின்னமும், ராமகிருஷ்ணா மடத்தின் சின்னமும் ஒரே மாதிரி பாம்பு சுற்றி இருப்பது போன்று இருப்பது தெரிய வந்தது.- Source: seithipunal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!