முக்கால்அடி அகலமுள்ள கோட்டை சுவருக்காக… தந்தை-மகள் அடித்துக்கொலை


நெல்லையில் வீட்டு சுவர் தகராறில் தந்தை, மகள் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் 3 பேரை கைது செய்தனர்.

நெல்லை மேலப்பாளையம் அருகே உள்ள குறிச்சி வேடுவர் காலனியை சேர்ந்தவர் தங்கமுத்து(வயது 55), கூலித் தொழிலாளி. இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த ஜெயராஜ் என்பவருக்கும் சுற்றுச்சுவர் சம்பந்தமாக கடந்த 5 ஆண்டுகளாக தகராறு இருந்து வந்தது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று பொங்கலுக்காக தங்கமுத்துவின் மகள் சுமதி மற்றும் அவரது கணவர் ஆறுமுகம் ஆகியோர் ரெட்டியார்பட்டியில் இருந்து தந்தை வீட்டிற்கு வந்திருந்தனர். அப்போது வீட்டு சுற்றுச்சுவர் மட்டும் வெள்ளையடிக்காமல் இருந்தது. இதனால் நேற்று தங்கமுத்துவும், அவரது மகள் சுமதியும் சுற்றுச்சுவருக்கு வெள்ளையடித்தனர்.

அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன்கள் பூபதி என்ற அந்தோணிராஜ், ராஜகுமார் ஆகியோர் அங்கு வந்து, “கோர்ட்டில் வழக்கு உள்ளதால் சுவருக்கு வெள்ளையடிக்க கூடாது” என்று கூறி தடுத்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த ஜெயராஜூம், அவரது மகன்கள் பூபதி, ராஜகுமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து அங்கு கிடந்த இரும்பு கம்பியால் தங்கமுத்துவையும், அவரது மகள் சுமதியையும் சரமாரி தாக்கினார்கள். இதில் அவர்களது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஓடிவந்தனர். அதற்குள் ஜெயராஜூம், அவரது 2 மகன்களும் தப்பி ஓடிவிட்டனர். படுகாயத்துடன் உயிருக்கு போராடிய தந்தை- மகளை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர்கள் பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்துக்கு நெல்லை மாநகர போலீஸ் கமி‌ஷனர் தீபக் டாமோர் உத்தரவின் பேரில் துணை கமி‌ஷனர் சரவணன், உதவி கமி‌ஷனர் பெரியசாமி, இன்ஸ்பெக்டர் பர்னபாஸ் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது முக்கால்அடி அகலமுள்ள கோட்டை சுவருக்காக மோதல் ஏற்பட்டு 2 பேர் கொலை செய்யப்பட்ட தகவல்கள் கிடைத்தது.

இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விரைந்து செயல்பட்டு, வெளியூருக்கு தப்பி ஓட முயன்ற ஜெயராஜ், அவரது மகன்கள் பூபதி என்ற அந்தோணிராஜ், ராஜகுமார் ஆகிய 3 பேரையும் கைது செய் தனர்.

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, “கோர்ட்டில் வழக்கு இருக்கும்போது சுற்றுச்சுவருக்கு வெள்ளையடித்ததால் ஆத்திரத்தில் அடித்து கொலை செய்தோம்” என்று வாக்குமூலம் அளித்தனர். இதைத் தொடர்ந்து கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட இரும்பு கம்பியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இன்று கைதான 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!