500 ரூபாய் பழைய நோட்டுகளுடன் கலெக்டர் ஆபீசுக்கு வந்து கதறிய மூதாட்டி


500, 1000 ரூபாய் மதிப்பிழப்பு தெரியாமல் பழைய 500 ரூபாய் நோட்டுகள் ரூ.12 ஆயிரத்துடன் கலெக்டர் ஆபீஸ் வந்த மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடந்தது. இதில் மனு கொடுப்பதற்காகவேலூர் சலவன்பேட்டை சூளைமேடு பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி (வயது65) வந்திருந்தார். அவர் வைத்திருந்த மஞ்சள் நிற துணி பையில் மத்திய அரசு செல்லாது என அறிவித்த பழைய 500 ரூபாய் நோட்டுகளாக ரூ.12000 கட்டாக சுருட்டி வைத்திருந்தார். அவர் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபனிடம் மனு கொடுத்தார். அப்போது நான் யாருடைய ஆதரவும் இல்லாமல் தனியாக வசித்து வருகிறேன். கடந்த 3 ஆண்டுக்கு முன்புகூலி வேலை செய்து பணம் சேர்த்து வந்தேன். பழைய 500 ரூபாய் நோட்டுகளை தலையணைக்கு அடியில் மறைத்து வைத்து பாதுகாப்பாக வைத்திருந்தேன்.

இந்த நிலையில் வீட்டு வாடகைக்காக அந்த பணத்தை எடுத்து கொடுத்த போது இந்த பணம் செல்லாது என அறிவிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர். நேற்றுதான் இது எனக்கு தெரியவந்தது. இதனால் நான் செய்வதறியாது உள்ளேன். 500, 1000 ரூபாய் மதிப்பிழப்பு அறிவிப்பு பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

இந்த பழைய 500 ரூபாய் நோட்டுகளை மாற்றி தந்து எனக்கு உதவி செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க கூறினார். இதுபற்றி வங்கி அதிகாரியிடம் விசாரிக்கப்பட்டது. அப்போது பழைய ரூபாய் நோட்டுகளை எதுவும் செய்ய முடியாது என அவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து மூதாட்டியை ஒரு ஓரமாக அதிகாரிகள் அமர வைத்திருந்தனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!