இன்னும் ஒரு வாரத்திற்கு மழை அடித்து கொட்ட போகிறதாம்… வானிலை மையம் தகவல்


கடல் காற்றின் திசை, வேகம் மாறி உள்ளதால் வடகிழக்கு பருவமழை மேலும் ஒரு வாரம் நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 15 சதவீதம் அளவுக்கு வடகிழக்கு பருவமழை பெய்துள்ளது- வானிலை மையம்
ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, நீலகிரி, விருதுநகர் மாவட்டங்களில் மிக அதிக மழை பெய்துள்ளது.
சென்னை, வேலூர், மதுரை, பெரம்பலூர் மாவட்டங்களில் இயல்பைவிட குறைந்த அளவு மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையைவிட வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் அதிக மழை கிடைக்கும்.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை குறிப்பிட்ட கால கட்டத்தில் அக்டோபர் மாதம் 16-ந்தேதி தொடங்கியது.

அடுத்தடுத்து உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வங்க கடல், அரபிக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியாலும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது.

சராசரியாக தமிழகத்தில் அதிக மழை பெய்தாலும், மாவட்டம் வாரியாக பார்க்கும்போது 22 மாவட்டங்களில் இயல்பைவிட அதிக மழை பெய்தது.

இதில் ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, நீலகிரி, விருதுநகர் மாவட்டங்களில் மிக அதிக மழை பெய்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் 480 மி.மீட்டர் மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை 830 மி.மீட்டர் மழை கிடைத்துள்ளது. இது 85 சதவீதம் அதிகம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 467.8 மி.மீட்டர் மழை பெய்வதற்கு பதிலாக 787 மி.மீ மழை பெய்து இருக்கிறது.

இதுபோல் நெல்லை மாவட்டத்தில் இதுவரை கிடைக்க வேண்டிய மழை அளவு 440.6 மி.மீட்டர். ஆனால் 696 மி.மீ மழை கிடைத்துள்ளது. இது 54 சதவீதம் அதிகமாகும்.

சென்னை, வேலூர், மதுரை, பெரம்பலூர் மாவட்டங்களில் இயல்பைவிட குறைந்த அளவு மழை பெய்துள்ளது.

சென்னையில் இந்த கால கட்டத்தில் 705 மி.மீட்டர் மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 630 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. இது 14 சதவீதம் குறைவு.

வேலூரில் இயல்பான மழை அளவு இதுவரை 352 மி.மீட்டர் பெய்திருக்க வேண்டும். ஆனால் இப்போது 270 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. இது 22 சதவீதம் குறைவாகும்.

மதுரையில் 395 மி.மீட்டருக்கு பதிலாக 320 மி.மீட்டர் மழைதான் பெய்துள்ளது. இது 20 சதவீதம் குறைவு. பெரம்பலூரில் 432 மி.மீட்டர் மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 340 மி.மீட்டர் தான் பெய்துள்ளது. இது 23 சதவீதம் குறைவாகும்.

ஆனாலும் ஒட்டு மொத்தமாக பார்க்கும்போது தமிழகத்தில் 15 சதவீதம் அளவுக்கு அதிக மழை பெய்துள்ளது.

வடகிழக்கு பருவமழை டிசம்பர் 31-ந்தேதியுடன் முடிந்துவிடும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் ஜனவரி முதல் வாரம் வரை பருவமழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில், கடல் காற்றின் திசை, வேகம் மாறி உள்ளதால் பருவமழை மேலும் ஒரு வாரம் நீடித்துள்ளதாகவும் இதன் காரணமாக கூடுதல் மழை கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என்றார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!