ஜெ.மீது பாசம் காட்டிய ஜீவஜோதி… இழுக்க தவறி விட்டதா அதிமுக..!


சரவண பவன் ராஜகோபாலின் சபலத்திற்கு தனது கணவரை பறி கொடுத்து விட்டு அதற்கு நீதி கிடைக்க கடுமையாக போராடி வந்த ஜீவஜோதி தற்போது அரசியலுக்கு வந்துள்ளார். விரைவில் அவர் பாஜகவில் முறைப்படி சேரவுள்ளார். இதுதான் இப்போது டாக் ஆப் தி டவுனாக மாறியுள்ளது. ஆனால் ஜீவஜோதியை ஏன் அதிமுக தன் பக்கம் இழுக்க தவறி விட்டது என்ற ஆச்சரியம் எழுந்துள்ளது.

காரணம், ஜீவஜோதி மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது மிகுந்த அன்பும், பாசமும், மரியாதையும் வைத்திருந்தவர்.

காரணம், சரவண பவன் ராஜகோபாலுக்கு எதிரான வழக்கில் ஜெயலலிதா மிகுந்த அக்கறை காட்டினார். ஜீவஜோதிக்கு அப்போதைய அதிமுக அரசு முழு ஆதரவாக அரவணைப்பாக இருந்தது. வழக்கு விசாரணை தொய்வின்றி நடக்க ஜெயலலிதா தீவிரமாக இருந்தார். அதில் தீவிர அக்கறையும் காட்டினார்.

ஒரு தடயம் கூட மிஸ் ஆகாமல் போலீஸாரும் தீவிரமாக புலனாய்வு செய்தனர். இதனால் தான் சரவண பவன் ராஜகோபாலுக்கு கடுமையான தண்டனை கிடைத்தது. ஆனாலும் அவர் முறைப்படி தண்டனைக் காலத்தைக் கழிக்காமல் இயற்கையாகவே மரணம் எய்தி விட்டார்.

ராஜகோபால் வழக்கில் தீவிர அக்கறை காட்டியதோடு நிற்காமல் ஜீவஜோதிக்கு அரசு வேலைக்கும் ஏற்பாடு செய்தார் ஜெயலலிதா. ஜீவஜோதியும் கூட சில காலம் வேலைக்கும் போனார். ஆனால் அங்கு அத்தனை பேரும் அவரிடம் பழைய விஷயத்தையே திரும்பத் திரும்ப பேசி அவரது புண்ணைக் கிளறி விட்டதால் வேலையை விட்டு விட்டார்.

இப்படி ஜீவஜோதி மீது மிகுந்த அக்கறையும், பரிவும் காட்டியவர் மறைந்த ஜெயலலிதா. ஜீவஜோதியே கூட தனது பேட்டியின்போது ஜெயலலிதா மட்டும் இல்லாமல் போயிருந்தால் நான் உயிருடனேயே இருந்திருக்க மாட்டேன் என்று உருக்கமாக கூறியிருந்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் ராஜகோபாலுக்கு தண்டனையை கோர்ட் உறுதிசெய்தபோது, செய்தியாளர்களிடம் மனம்விட்டு பேசியிருந்தார் ஜீவஜோதி.. அப்போது அவர் “அன்று ராஜகோபால் என்னை அளவுக்கு அதிகமாக கொடுமை படுத்தினார். அதனை என்னால் பொறுத்து கொள்ளவே முடியவில்லை. அதனால் ஜெயலலிதாவை சந்தித்து இது பத்தி சொல்லலாம்னு முடிவு பண்ணேன். ஆனா அன்னைக்கு அவங்க ஆட்சியில் இல்லை. இருந்தாலும் என் பிரச்சனை, கண்ணீரை எல்லாம் பார்த்த அவங்க எனக்கு உதவி செய்வதாக உறுதி தந்தாங்க.

ஆசீர்வாதம் 2001-ம் ஆண்டு அவங்க முதல்வராக பொறுப்புக்கு வந்துட்டாங்க. உடனே சாந்தகுமார் கொலை வழக்கை போலீசார் தீவிரமாக புலன்விசாரணை செய்ய அவங்கதான் நடவடிக்கை எடுத்தாங்க. ஒருவேளை ஜெயலலிதா இப்போது உயிரோடு இருந்திருந்தால், கண்டிப்பாக அவரை நேரில் சந்தித்திருப்பேன்.. அவங்க காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி இருப்பேன்” என்று ஜெயலலிதாவின் புகழை பாடியதையும் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது. அப்படி ஜெயலலிதா மீது மரியாதை வைத்துள்ளவர் ஜீவஜோதி.

ஆனால் இன்று ஜீவஜோதி அதிமுகவில் இணையாமல் பாஜகவில் இணைந்திருக்கிறார். உண்மையில் ஜீவஜோதி அவராக அரசியலுக்கு வரவில்லை. அவரது உறவினரான பாஜகவின் கருப்பு முருகானந்தம் முயற்சியால்தான் வந்துள்ளார். அதுவும் தொடர்ந்து ஜீவஜோதியை அரசியலுக்கு வருமாறு முருகானந்தம் கேட்டு வந்துள்ளார். அதை ஏற்றே வருகிறார் ஜீவஜோதி.

ஜெயலலிதா மரியாதை வைத்துள்ள ஜீவஜோதியை ஏன் அதிமுகவினர் இப்படி தங்கள் பக்கம் அழைக்க முயற்சிக்கவில்லை என்ற ஆச்சரியம் வருகிறது. ஒரு வேளை அதிமுகவுக்கு ஜீவஜோதி வந்திருந்தால் நிச்சயம் தஞ்சை பகுதியில் ஒரு நல்ல முகம் அவர்களுக்குக் கிடைத்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். ஜீவஜோதி மீதான அபிமானம், அனுதாபம் போன்றவை நிச்சயம் அதிமுகவுக்கு பலன் கொடுத்திருக்கவே செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால் ஜீவஜோதியை தங்கள் பக்கம் இழுத்து பாஜக முந்திக் கொண்டு விட்டது. இந்த வகையில் அதிமுக சற்று சுதாரிப்புடன் செயல்படாமல் விட்டு விட்டதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!